தொலைதூரப் பகுதிகளுக்கான பிரதான ரயில் சேவைகள் வரலாற்றில் முதல் தடவையாக ரத்துச் செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக லோகோமோட்டிவ் இன்ஜினியரிங் நடத்துநர்கள் சங்கத்தின் தலைவர் கே.ஏ.யு.கொந்தசிங்க தெரிவித்துள்ளார்.
கிழக்கு வலயத்திற்குட்பட்ட மாஹோ, கல் ஓயா, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய பிரதான தொலைதூரப் புகையிரதங்கள் பணியாளர்களின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
“ரயில்வே திணைக்களத்தின் அனைத்து அத்தியாவசிய சேவைகளும் ஊழியர்கள் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. ரயில்வே சேவைகளில் மூன்றாம் தரத்தில் உள்ள 90க்கும் மேற்பட்ட இன்ஜின் ஓட்டுனர்கள் இன்னும் இரண்டாம் தரத்திற்கு உயர்த்தப்படவில்லை. இதனால், அவர்களால் இன்ஜின்களை இயக்க முடியவில்லை” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஒப்பந்த அடிப்படையில் ரயில்வேயில் இணைக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கு முறையான சேர்க்கை நடைபெறும்வரை தொழில் உறுதிப்படுத்தல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற காரணங்களால் ரயில் சேவைகளை ரத்துச் செய்ய நேரிட்டுள்ளது. வரலாற்றில் முதல் தடவையாக கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையில் இயக்கப்படும் ரயிலை இரத்து செய்ய செய்யவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடைமுறை தொடர்ந்தால், ரயில் சேவைகள் வெகுவாக பாதிக்கப்படும், மேலும், இந்த சிக்கல் தொடர்பில் அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காவிட்டால், புகையிரத திணைக்களத்தை பாதுகாக்கும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என கொந்தசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.