வவுனியா குடும்ப இறப்பு சம்பவம் – உடற்கூற்று பரிசோதனை அறிக்கை வெளியானது!(Update)

வவுனியாவில் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வரின் சடலங்கள், பொலிஸ் விசாரணைகளைத் தொடர்ந்து உடற்கூற்று பரிசோதனைகளுக்காக வவுனியா போதனா வைத்தியசாலைக்கு நேற்று (07.03) மாலை எடுத்துச்செல்லப்பட்டதையடுத்து, இன்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்ட சிவபாதசுந்தரம் கெளஷிகன் (41) தற்கொலை செய்துகொண்டாரா அல்லது கொலையா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும், சட்ட வைத்திய நிபுணர் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அவரது மனைவி கௌ.வரதராயினி (36) (வவுனியா பாடசாலையொன்றின் ஆசிரியை) மற்றும் மகள்மார் மைத்ரா வயது (9), கேசரா வயது (3) வயதுடைய இரு பிள்ளைகளும் இறந்ததற்கான காரணங்களை உறுதிசெய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலதிகமான பரிசோதனைகளுக்காக உடற்கூற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பின்னர் பரிசோதனைகளுக்காக அனுப்பிவைக்கபடவுள்ளதாகவும் கூறியுள்ளார். இவ்வாறான நிலையில் இடம்பெற்றுள்ள மரணங்கள் கொலையா தற்கொலையா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பிரதேசத்தை சேர்ந்த சிலர் முகப்புத்தகங்களிலும், சில ஊடகங்களும் தவறான செய்திகளை மற்றும் வதந்திகளை பரப்புவதாகவும், உயிரிழந்தவர்களின் புகைப்படங்களை தவறான முறையில் பதிவிடுட்டு ஊடக தர்மத்திற்கு எதிராக செயற்படுவது கவலைக்குரிய பொறுப்பற்ற விடயமாகும் எனவும் சட்ட வைத்திய நிபுணர் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

வவுனியா குட்செட் அம்மா பகவான் வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து நேற்று (07.03) காலை ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பில் தமக்கு சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவித்ததையடுத்து, வவுனியா பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த இளம் குடும்பத்தின் இறுதி கிரியைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் நடைபெறுகின்ற வேளையில் பொதுமக்களும் ஊடகங்களும் பொறுப்பான ரீதியில் நடந்துகொள்ள வேண்டியது கட்டாயம். தேவையற்ற தகவல்களை பரப்புவதன் மூலமாக சம்பந்தப்பட்டவர்களுக்கும் விசாரணைகளுக்கு இடையூறுகள் ஏற்படுத்தப்படும் என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும்.

இறந்தவர்களின், இறப்பு சம்பத்தப்பட்ட புகைப்படங்களை ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரப்புவது சட்ட விரோதமானதும் ஊடக தர்மத்திற்கு புறம்பானதும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது. ஊடகவியலாளர்கள் இது போன்ற சம்பவங்களின்போது பொறுப்புடன் நடந்துகொள்ளவது கட்டாயம் என்பதை வீ மீடியா சுட்டிக்காட்டுகிறது.

வவுனியா குடும்ப இறப்பு சம்பவம் - உடற்கூற்று பரிசோதனை அறிக்கை  வெளியானது!(Update)

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version