அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தில் (SPC) இந்திய நிதி உதவியுடன் அச்சிடப்பட்ட பாடப்புத்தகங்கள் நேற்று (10.03) வியாழக்கிழமை முறையாக கையளிக்கப்பட்டதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஆகியோரால் இந்த பாடப்புத்தகங்கள் முறையாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும், கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமாரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 பில்லியன் அமெரிக்க டொலர் இந்திய கடன் உதவியானது 4 மில்லியன் மாணவர்களுக்குத் தேவையான 45% பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு உதவியதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த கடன்தொகையிலிருந்து 10 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இந்தியாவிலிருந்து காகிதம் மற்றும் அச்சிடுவதற்கு தேவையான பொருட்களை வாங்கியுள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
