லிஸ்டீரியா பக்டீரியாவை அடங்கிய உணவை உட்கொண்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் பதுளை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இரத்தினபுரி ஊடாக சிவனொளிபாதமலைக்கு செல்லும் வீதியிலுள்ள கடையொன்றில் உணவு உட்கொண்ட பெண் ஒருவருக்கு இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளதையடுத்து, அப்பகுதியிலுள்ள பல விற்பனை நிலையங்களில் சுகாதார திணைக்களம் நேற்று (17.03) சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
கடந்த சில நாட்களாக சிவனொளி பாதைக்கு யாத்திரை மேற்கொண்ட பக்தர்களில் பலர் லிஸ்டீரியோசிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தது.
இவ்வாறானதொரு பின்னணியில், ஹட்டன் ஊடாக சிவனொளிபாத மலைக்கு செல்லும் வீதியிலுள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் பால் பொருட்களின் மாதிரிகளை பெற்றுக்கொள்ளும் பணியை சுகாதார பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.
எவ்வாறாயினும், லிஸ்டீரியா பக்டீரியாவை உட்கொண்டு நோய்வாய்ப்பட்டதாக கூறப்படும் நபர்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியான போதிலும், அவை உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி எரத்ன பிரதேசத்தில் உயிரிழந்த பெண்ணுக்கு மாத்திரமே நோய் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது.