கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த மலையக உடரட மெனிகே ரயிலை நிறுத்த முயன்ற நபர் ரயிலில் மோதி படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தற்போது அவர் சிகிச்சைகளுக்காக டிக் ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இன்று (18.03) பிற்பகல் 1.00 மணியளவில் ரொசெல்ல மற்றும் ஹட்டன் புகையிரத நிலையங்களுக்கு இடையில் ஹட்டன், மல்லியப்பூ பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் ஹட்டன் டிக் ஓயா பிரதேசத்தில் உள்ள தோட்டமொன்றில் வசிப்பவர் எனவும், அதிகளவில் குடிபோதையில் இருந்ததால் ஓடும் ரயிலை ரயில் பாதையின் நடுவில் வந்து நிறுத்த முயன்றதாகவும் ஹட்டன் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.