2022 ஆம் ஆண்டுக்கான Fortune Global பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் சீனாவின் Sinopec நிறுவனம், ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள பல மில்லியன் ருபாய் பெறுமதியான எண்ணெய் சுத்திகரிப்புத் திட்டத்தில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினோபெக் நிறுவனம் சீனாவின் பீஜிங்கில் அமைந்துள்ள, சீன எண்ணெய் நிறுவனமாகும். எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு மற்றும் உற்பத்தியில் ஈடுபடும் இந்நிறுவனம் தற்போது ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலும் சேவைகளை வழங்கி வருகிறது.
கொழும்பில் உள்ள சீனத் தூதரகதின் அறிவித்தலின்படி, பெட்ரோலிய இரசாயனங்கள், வர்த்தகம் மற்றும் துறைமுகம் மற்றும் தொழில்துறைகளில் ஒத்துழைப்பு மற்றும் மேலதிக முதலீடுகளை செய்வதற்கு சினோபெக் குழுமம் மற்றும் சீன வணிகர்கள் குழுவின் உயர்மட்ட குழு ஒன்றும்அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தது.
உத்தேச முதலீடு குறித்து இரு தரப்புக்கும் இடையே தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதுடன், இத்துறையில் ஆரோக்கியமான போட்டியை ஏற்படுத்துவதற்காக மூன்று உலகளாவிய விநியோகஸ்தர்கள் மற்றும் உள்நாட்டு சில்லறை விற்பனை சந்தையில் தம்மை இணைத்துக்கொள்வார்கள் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
“தேசிய எரிசக்திக் குழு ஒப்புதல் அளித்தவுடன், அது அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும்” என்று கடந்த வியாழக்கிழமை (23.03) அமைச்சர் காஞ்சன ட்விட்டரிலும் பதிவிட்டிருந்தார்.