தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையில் நேற்று(27.03) தென்னாபிரிக்கா, செஞ்சூரியனில் நடைபெற்ற போட்டியில் மொத்தமாக 517 ஓட்டங்கள் குவிக்கப்பட்டு கூடுதலான ஓட்டங்கள் குவிக்கப்பட்ட போட்டி என்ற சாதனையும், மொத்த ஓட்ட எண்ணிக்கையாக 500 ஓட்டங்கள் கடந்த போட்டி என்ற சாதனையும் படைக்கப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்குமான போட்டியில் முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 04 விக்கெட்களை இழந்து 258 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் ஜோன்ஸ்டன் சார்ள்ஸ் 118(46) ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். கையில் மயேர்ஸ் 52(26) ஒட்டங்களையும், ரொமாறியோ ஷெபேர்ட் 41 ஒட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வெய்ன் பார்னல் 2 விக்கெட்களையும், மார்க்கோ ஜனேசன் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஜோன்ஸ்டன் சார்ள்ஸ் பெற்றுக் கொண்ட 39 பந்துகளிலான சதம் மேற்கிந்திய தீவுகளின் சாதனையாக மாறியுள்ள அதேவேளை சர்வதேச ரீதியில் நான்காவது வேகமான சதமாக அமைந்துள்ளது.
பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்கா அணி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 259 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் குயின்டன் டி கொக் 100 (44) ஒட்டங்களையும், ரெஷா ஹென்றிக்ஸ் 68(28) ஓட்டங்களையும் பெற்றனர். இந்த வெற்றி 20-20 போட்டிகளில் துரதியடிக்கப்பட்ட கூடுதலான ஓட்ட எண்ணிக்கை என்ற சாதனையை தென்னாபிரிக்கா அணிக்கு வழங்கியுள்ளது.
குயின்டன் டி கொக் 15 பந்துகளில் பெற்றுக் கொண்ட அரைச்சதம் தென்னாபிரிக்கா அணியின் வேகமான அரைச்சதமாக மாறியுள்ளது. 13 பந்துகளில் யுவராஜ் சிங் பெற்றுக் கொண்டதே சாதனையாக காணப்படுகிறது.
இரு அணிகளும் பெற்றுக் கொண்ட ஓட்ட எண்ணிக்கை அந்தந்த அணிகள் 20-20 போட்டிகளில் பெற்றுக் கொண்ட கூடுதலான ஓட்ட எண்ணிக்கையாக மாறியது. 20-20 போட்டிகளில் கூடுதலான ஓட்ட எண்ணிக்கையினை பெற்ற அணி என்ற சாதனை ஆப்கானிஸ்தான் அணியிடம் காணப்படுகிறது. 273 ஓட்டங்களை அவர்கள் பெற்றுள்ளனர்.
அடிக்கப்பட்ட 35 ஆறு ஓட்டங்கள் 20-20 சர்வதேசப் போட்டிகளில் பெறப்பட்ட கூடுதலான ஆறு ஓட்டங்கள் ஆகும். மேற்கிந்திய தீவுகள் அணி அடித்த 22 ஆறு ஓட்டங்கள் ஆப்கானிஸ்தான் அணியின் கூடுதல் ஆறு ஓட்டங்கள் என்ற சாதனையை சமன் செய்துள்ளது.
பெறப்பட்ட 81 எல்லை கடந்த (நான்கு, ஆறு) ஓட்டங்கள் என்ற சாதனையும் புதிதாக நிலை நாட்டப்பட்டுள்ளது.