வடமேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க உட்பட 5 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமை அலுவலகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
புத்தளம் பொறுப்பதிகாரி எஸ்.எம்.வை.எம். செனவிரத்ன, புத்தளம் பிரிவு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புஷ்பகுமார, ஆனமடுவ பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.சி.பி ஹேரத் மற்றும் ஆனமடுவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நிலந்த பண்டார ஆகியோரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் சேவை பொலிஸ் களப்படை தலைமை அலுவலகத்திற்குத் தேவைப்பட்டதன் காரணமாகவே இவ்விடமாற்றமானது தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியின் கீழ் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் செயற்படுத்தப்பட்டுள்ளதாக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் புத்தளம் விசேட அதிரடிப்படை முகாமில் கடமையாற்றிவந்த இரண்டு பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் அலுவலர், மற்றும்இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர் இணைந்து நவகத்தேகம பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரைத் தாக்கிய சம்பவத்தைச் சுமுகமாகக் கையாண்டு பிரச்சினையைத் தீர்வு காணாமல் நீதிமன்றம் வரை செல்ல அனுமதித்தமையாலேயே இடமாற்றம் செய்யப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தாக்குதலில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் ஐந்து பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
