2019 ஆம் ஆண்டு கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தாக்குதல் நடாத்திய தற்கொலை குண்டுதாரியின் மனைவியான ஷாரா ஜஸ்மின் எனப்படும் புலஸ்தினி மகேந்திரன் சாய்ந்தமருதில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டு வெடிப்பில் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசாங்க பகுப்பாய்வு திணைக்களம் நடாத்திய DNA பரிசோதனையின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பிலான மேலதிக விபரங்கள் நீதிமன்றத்துக்கு கையளிக்கப்படுமென பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறன நிலையில் இந்த DNA பரிசோதனையில் சந்தேகம் இருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
புதைக்கப்பட்டுள்ள உடல் ஷாரா ஜஸ்மின் உடையது இல்லை என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அது எவ்வாறு உறுதி செய்யப்பட்டது என முஜிபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பியுள்ளார். இதில் எதோ சதியிருப்பதாகவும், இந்த குண்டு தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களது உடல்கள் மீள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவேண்டும் எனவும் முஜிபுர் ரஹ்மான் வலியுறுத்தியுள்ளார்.
