போலி இணையதளம் மூலம் விசா வழங்கிய நபர் கைது!

போலி இணையத்தளத்தை உருவாக்கி விசா வழங்கிய சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கொழும்பில் உள்ள இந்திய விசா நிறுவனத்தின் கிளையொன்று கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோபல்லவ மாவத்தை பகுதியில் அமைந்துள்ளதுடன், குறித்த சந்தேக நபரால் அந்த நிறுவனத்தின் தகவல்களைக் குறிப்பிட்டு இணையத்தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் ஊடாக சில காலமாக வீசா வழங்குவதாக கூறி மக்களிடம் பணம் பெற்று வந்துள்ள குறித்த சந்தேகநபர் கடந்த மார்ச் 28ஆம் திகதி மாலை வத்தேகம பிரதேசத்தில் மடிக்கணினி மற்றும் கையடக்க தொலைபேசியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பன்வில பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளதுடன், ஆள்மாறாட்டம், மோசடி, அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட குற்றங்கள் மற்றும் கணினி குற்றச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட குற்றங்களுக்காக நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Social Share

Leave a Reply