இலங்கை, டான்ஸ் ஸ்போர்ட் அமைப்பின் இரண்டாவது வருட பூர்த்தி நிகழ்வும், அவர்களுக்கான உத்தியோகபூர்வ இணைய அறிமுக நிகழ்வும் கடந்த 27 ஆம் திகதி கொழும்பு சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்றது.
டான்ஸ் ஸ்போர்ட் 2024 ஆம் ஆண்டு பரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு இளையோருக்கான ஒலிம்பிக் போட்டிகளில் இந்த விளையாட்டு சேர்த்துக்கொள்ளப்பட்டிருந்தது. 1997 ஆம் ஆண்டு சர்வதேச ஒலிம்பி பேரவையினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த விளையாட்டுக்கான அமைப்பு 1957 ஆம் ஆண்டு சுவிற்சலாந்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. குறித்த அமைப்பின் இலங்கைக்கான அமைப்பு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வின் வரவேற்பு உரையினை டான்ஸ் ஸ்போர்ட் அமைப்பின் தலைவர் மாலிங்க பெர்னாண்டோ நிகழ்த்தினார். அதனை தொடர்ந்து எல் லட்டினோ நடன அக்கடமியின் இலங்கையின் பிரபல நடன கலைஞர்களான சா சா மற்றும் ஜிவி ஆகியோர் வழங்கியிருந்தார்கள்.
இந்த நிகழ்வின் முழுமையான அனுசரணையார்களான போர்சூன் என்டர்டைன்ட்மென்ட் நிறுவனத்தின் ஷங் கோங் மற்றும் சினமன் கிரான்ட் நிறுவனத்தின் பிராந்திய உப தலைவர் கமல் முனசிங்க, இலங்கை ஒலிம்பிக் கமிட்டியின் செயலாளர் மக்ஸ்வெல் டி சில்வா, விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பளார் நாயகம் அமல் எதிரிசூரிய ஆகியோர் அடங்கலாக ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினர்கள், அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
“சர்வதேச ரீதியில் பிரபலமாகி வரும் டான்ஸ் ஸ்போர்ட்ஸ் இலங்கையிலும் வளர்ச்சி பாதையில் செல்வதாகவும், நடனத்துடன் இணைந்ததாக இந்த விளையாட்டு சில பெயர் மாற்றங்களுடன் தற்போது டான்ஸ் ஸ்போர்ட்ஸ் என்ற பெயரில் ஒலிம்பிக்கில் இணைக்கப்பட்டுள்ளது” என டான்ஸ் ஸ்போர்ட்ஸ் அமைப்பின் செயலாளர் செல்வராஜா கோபிநாத் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
இந்த விளையாட்டை பாதுகாக்கும் நோக்கில் உள்ளரங்க மேடையில் நடைபெறும் நிகழ்வு, விதிமுறைகளுக்கு உட்பட்டது. இந்த விளையாட்டு உடல் நலத்துக்கு சிறந்தது, செலவற்றது, வயது, பாலின தடைகளற்றது, அனைவருக்குமான விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என கோபிநாத் தனது உரையில் மேலும் கூறினார்.
இந்த நிகழ்வில் பல முன்னணி நடன கலைஞர்கள் டான்ஸ் ஸ்போர்ட் விளையாட்டை மேடையில் நிகழ்த்தி காட்டினார்கள்.


