உலக தமிழர் பூப்பந்து பேரவையினால் வருடம் தோரும் நடாத்தும் உலக தமிழர் பூப்பந்து தொடர் இம்மாதம் 08 ஆம் 09 ஆம் திகதிகளில் சுவிற்சலாந்து பேர்ன் நகரில் நடைபெறவுள்ளது.
2020 ஆம் ஆண்டு நடைபெறவேண்டிய எட்டாவது தொடரே இந்த வருடம் நடைபெறவுள்ளது. கொரனோ தொற்று காரணமாக நடைபெறாத காரணத்தினால் இந்த வருடம் நடைபெறுகிறது. உலகின் பல முக்கிய இடங்களிலிருந்தும் பலர் இந்த தொடரில் கலந்து கொள்வதற்காக சுவிற்சலாந்துக்கு சென்றுள்ளனர்.
கனடாவிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் அதிகமானவர்கள் கலந்து கொண்டுள்ளதாகவும், ஜேர்மனி, பிரான்ஸ், நெதர்லாந்து, நோர்வே, டென்மார்க், சுவீடன், சுவிற்சலாந்து அடங்கலாக ஐரோப்பியா நாடுகள் மற்றும் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்தும் 250 இற்கும் மேற்பட்ட வீர வீராங்கனைகள் இந்த தொடரில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளதாக உலக தமிழர் பூப்பந்து பேரவையின் ஸ்தாபக தலைவர் கந்தையா சிங்கம் வி மீடியாவுக்கு தெரிவித்துள்ளார்.
உலக தமிழர் பூப்பந்து பேரவை எந்தவித அரசியல் தலையீடுகளுமின்றி சுயாதீனமாக, விளையாட்டை குறிப்பாக பூப்பந்தை குறிவைத்து செயற்பட்டு வருகிறது. இலங்கை அடங்கலாக பல நாடுகளிலும் தமது கிளைகளை நிறுவி போட்டிகள் மற்றும் பயிற்சிகளை உலக தமிழர் பூப்பந்து பேரவைவை நடாத்தி வருகின்றது.
சுவிற்சலாந்தை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் உலக தமிழர் பூப்பந்து பேரவை இரண்டாவது தடவையாக சுவிற்சலாந்தில் உலக தமிழர் பூப்பந்து தொடரரை இம்முறை நடாத்துகிறது.
வருடா வருடம் மிகவும் சிறப்பாகவும் நடாத்தப்படும் உலக தமிழர் பூப்பந்து தொடர் இம்முறையும் வழமை போன்றே சிறப்பாக நடாத்தப்பட சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கந்தையா சிங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உலக தமிழர் பூப்பந்து தொடருக்கு வி மீடியா ஊடக பங்களிப்பினை வழங்கியுள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.

