பிரதான வீதிகளிலும், மாகாணங்களுக்குமிடையிலான போக்குவரத்துகளுக்கும் வீதி பராமரிப்பு கட்டணம் அறவிடப்படவுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
கட்டண நிலையங்களை அமைக்க முதற்கட்டமாக 100 மில்லியன் ரூபா பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான அனுமதி அமைச்சரவையில் கிடைக்க பெற்றுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்த்துள்ளார்.
வீதி பராமரிப்பு கட்டணம் மிகவும் அதிகமாக காணப்படுவதாகவும், அதன் காரணமாக வெளிநாடுகளில் காணப்படும் திட்டம் இலங்கையிலும் அறிமுகம் செய்யப்படுவதாகவும், வாகன போக்குவரத்தாளர்கள், குறிப்பாக மோட்டார் வாகன போக்குவரத்தாளர்கள் அதிகமாக வீதிகளை பாவிப்பதனால் அவர்கள் இந்த கட்டணங்களை செலுத்த வேண்டுமெனவும் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதிக வேக வீதிகளுக்கான ஒதுக்கீடுகள், வெளிநாட்டு பண ஒதுக்கீடுகளின்றி கிராமிய மற்றும் நகர வீதிகளின் பராமரிப்புக்காக 375 பில்லியன் ரூபா 2022 ஆம் பாதீட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ள அவர், வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு இந்த திட்டம் கையளிக்கப்படவுள்ளதாகவும் மேலும் கூறியுள்ளார்.
25,000 கிலோ மீட்டர் தூரமான வீதிகள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் பராமரிக்கப்பட்டு வருகின்றது. பொருளாதரா வீழ்ச்சி காரணமாக வீதி பராமரிப்புகள் உரிய முறையில் செய்யப்படவில்லை. இந்த புதிய திட்டத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம் திறைசேரியிடம் பணம் கோராமல் வீதிகளை அபிவிருத்தி செய்யலாமென அமைச்சர் பந்துல குணவர்தன நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
