உள்ளூராட்சி மன்ற தேர்தல் 2023, இந்த மாதம் 25 ஆம் திகதி நடைபெறுவது சாத்தியமல்ல என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
இன்று(10.04) பிரதமர் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இடையிலான சந்திப்பு நடைபெற்றமை தொடர்பிலேயே இந்த கருத்தினை அவர் கூறியுள்ளார். தற்போதய நிலவரத்தின் படி போதிய நாட்கள் இல்லை. தபால் மூல வாக்களிப்பு இன்னமும் நடைபெறவில்லை. ஆகையால் இந்த மாதம் 25 ஆம் திகதி நடாத்தப்பட வாய்ப்புகளில்லை என மேலும் கூறியுள்ளார்.
பிரதமருக்கும், தேர்தல் ஆணைக்குழுவுக்குமிடையிலான சந்திப்பு சிநேகபூர்வமாக இடம்பெற்றதாகவும், தேர்தலை நடாத்துவதற்கு ஏற்ற நடவடிக்கைளை எடுத்து தருவதாக பிரதமர் உறுதியளித்துள்ளதகாவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் செய்துள்ள அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவது தொடர்பிலும் மேலும் பேசப்பட்டுள்ளதாகவும், சிலர் தேர்தலில் போட்டியிடும் இடங்களுக்கு வெளியே பணிகளில் ஈடுபட்டு வருவதாகும், அவர்களது சம்பளங்களை வழங்குவது தொடர்பிலும் பேசப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தலை பிற்போடுவது தொடர்பில் நிதியமைச்சோடு கலந்தாலோசித்த பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழு முடிவெடுக்குமென ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
