இலங்கையில் எரிபொருள் விநியோகம் செய்வதற்கான அனுமதியைப் பெற்றுள்ள மூன்று வெளிநாட்டு நிறுவனங்களும் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் இரண்டு வாரங்களில் இதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களில் கைச்சாத்திட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சீனாவின் சினோபெக், ஆஸ்திரேலியாவின் யுனைடெட் பெட்ரோலியம், அமெரிக்காவின் ஆர்.எம். PARKS எனப்படும் மூன்று ஏஜென்சிகளுக்கு தற்போது இந்த நாட்டில் எண்ணெய் விநியோகம் செய்யும் உரிமம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் எரிபொருளை விநியோகிக்கும் 1142 நிரப்பு நிலையங்கள் உள்ளதுடன், அவற்றில் 234 நிரப்பு நிலையங்களில் பெற்றோலிய கூட்டுத்தாபனம் முழு உரிமையைக் கொண்டுள்ளது.
மீதமுள்ள 908 நிரப்பு நிலையங்கள் தனியார் விநியோகஸ்தர்களுக்கு சொந்தமானவை என கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு விநியோகஸ்தருக்கும் ஐம்பது புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிர்மாணிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் எனவும், ஒவ்வொரு நிறுவனத்திற்கும் இருநூறு எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.