மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையில் இன்று (16.04) IPL இன் 22 ஆவது போட்டி மும்பை வங்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சச்சின் டென்டுல்கரின் மகன் அர்ஜுன் டென்டுல்கர் IPL அறிமுகத்தை மேற்கொண்டிருந்தார். மும்பை அணி இந்த போட்டியில் அதிரடியான துடுப்பாட்டத்தின் மூலமாக வெற்றி பெற்றுக்கொண்டது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 185 ஓட்டங்களை பெற்றது. இதில் வெங்கடேஷ் ஐயர் 104(51) ஓட்டங்களை பெற்றார். இது இவரின் முதலாவது சதமாகும். பந்துவீச்சில் ஹ்ரிதிக் ஷொகீன் 2 விக்கெட்களையும், பியுஷ் சாவ்லா, கமரூன் க்ரீன், டுவான் ஜென்சென், ரிலீ மெர்டித் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். இந்த தொடரில் ஏற்கனவே சதம் பெறும் வாய்ப்பை இழந்த வெங்கடேஷ் இன்று சதமடித்து ஒரேஞ் நிற தொப்பிக்கு சொந்தக்காரன் ஆனார். அவர் மட்டுமே தனித்து நின்று ஓட்டங்களை பெற மறு புறமாக விக்கெட்கள் வீழ்ந்தமை அவர்களுக்கு பலத்த அடியாக மாறியது.
பதிலுக்கு துடுப்பாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 17.4 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 186 ஓட்டங்களை பெற்றது. ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் 65 ஓட்டங்களை வழங்க மும்பை இந்தியன்ஸ் அணிக்கு துரதியடிக்க இலகுவானது. இஷன் கிஷன் 58(28) ஓட்டங்களை பெற்று அதிரடி ஆரம்பத்தை வழங்கினார். சூர்யகுமார் யாதவ் 43(25) ஓட்டங்களையும், திலக் வர்மா 30(25) ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் சுயாஷ் ஷர்மா 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
மும்பை இந்தியன்ஸ் அணி முதலிரு போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், அடுத்தடுத்து இரு வெற்றிகளைப் பெற்று எட்டாமிடத்தை தக்க வைத்துள்ளது. கொல்கொத்தா அணி 5 போட்டிகளில் 2 வெற்றிகளைப் பெற்று ஐந்தாமிடத்தில் தொடர்கிறது.