உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக, சீனாவை பின்தள்ளி இந்தியா முதலிடம் வகிப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் தற்போதைய மக்கள்தொகை 142.86 கோடி என பதிவாகியுள்ளது.
சீனாவின் விவசாயக் கொள்கைகளின் கீழ் மில்லியன் கணக்கான மக்கள் பட்டினியால் உயிரிழந்த 1960 களின் காலப்பகுதிக்குப் பின்னர் முதல் முறையாக கடந்த ஆண்டில் சீனாவின் மக்கள் தொகை குறைவடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதியத்தின் (UNPF) அறிக்கையின்படி, இந்தியாவின் மக்கள் தொகை 1.4286 பில்லியனாகவும், சீனாவின் மக்கள் தொகை 1.4257 பில்லியனாகவும் பதிவாகியுள்ளது.
340 மில்லியன் மக்கள்தொகையுடன் அமெரிக்கா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளதாக தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
மேலும் அண்மைய காலங்களில், சீனா பிறப்பு விகிதத்தில் சரிவைக் காண்பத்துடன் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வயதாகி வருகின்றனர். சீனாவில் பல பிராந்தியங்கள் பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் மக்கள் தொகையின் சரிவை மாற்றி அமைக்க அவை இதுவரை கைகொடுக்கவில்லை.
அத்துடன், 2011இல் கடைசியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதால், இந்தியாவில் அதன் மக்கள்தொகை குறித்த சமீபத்திய தரவு எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில், ஒவ்வொரு 10 வருடங்களுக்கும் ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு செய்யப்படுவதால், கடந்த 2021 இல் நடத்தப்பட இருந்தது, எனினும் கொரோனா தொற்று காரணமாக இது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐ.நா அறிக்கையின்படி இந்தியாவின் மக்கள்தொகையில், கிட்டத்தட்ட 1/4 பேர் 14 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், 68 சதவீதமானோர் 15 முதல் 64 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும், 7 சதவீதமானோர் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இந்தியாவின் மக்கள்தொகை மூன்று தசாப்தங்களாக உயர்ந்து பின்னர் அது குறையத் தொடங்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மேலும்
2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் உலக மக்கள்தொகை 8.045 பில்லியனை எட்டும் என்றும் புதிய ஐ.நா அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.