”கூட்டு நாடகம் நடத்தி அனைவரையும் ஏமாற்றி ஆட்சிக்கு வந்தார்கள் கோட்டா குழுவினர்” – சம்பிக்க ரணவக்க

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்த பல விசாரணை ஆணைக்குழுக்கள் இருந்த போதிலும், நான்கு தீர்க்கப்படாத கேள்விகள் எஞ்சியுள்ளன என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

தௌஹீத் ஜமாத் அமைப்புக்கு இலங்கை இராணுவ புலனாய்வுப் பிரிவினர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர் என பல தரப்புகளிடமிருந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவற்றிற்கு இன்றுவரையில் அவர்கள் பதில் அளிக்கவில்லை.

தௌஹீத் ஜமாத் அமைப்பு, கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு ஒப்புதல் அளித்தது ஏன் என கேள்வி எழுப்பிய அவர், இந்த தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்பதில் தமக்கும் நம்பிக்கை இல்லை என தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டிய பகுதியில் உள்ள 43வது படையணியின் காரியாலயத்தில் நேற்று (21.04) வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,

21 குண்டுத் தாக்குதலுக்கு பின்னர் கருத்து வெளியிட்ட சஹ்ரானின் தரப்பினர் நியூசிலாந்து நாட்டில் முஸ்லிம் பள்ளிவாசலில் இடம்பெற்ற தாக்குதலுக்கு பதில் தாக்குதலாகவே இங்குள்ள தேவாலயங்களில் தாக்குதல் நடத்தியதாக கூறியதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இந்த சஹ்ரான் என்பவர் யார்? என்ற கேள்வியும் இன்றுவரை அனைவர் மத்தியிலும் இருக்கிறது. 2010 ஆம் ஆண்டு பூனே வெதுப்பக வெடிப்பு சம்பவம், 2016ம் ஆண்டு டாகாவில் இடம்பெற்ற தாக்குதல் ஆகியவற்றுக்கும் 2019 ஏப்ரல் 21 சங்ரில்லா விடுதியில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கும் இடையில் நெருங்கி தொடர்பு இருக்கிறது.

மேலும் இவ்வாறான தாக்குதல் தொடர்பில் இலங்கையில் தேசிய பாதுகாப்பு பிரிவினர் அவதானம் செலுத்தவில்லையா? இலங்கை ராணுவ புலனாய்வு பிரிவினர் இதை கண்டுகொள்ளவில்லையா ? தென்னிந்தியாவில் இருந்து செயற்பட்ட அபுஹிந்த் மௌலவி என்பவர் யார்? அடிப்படைவாதம் தொடர்பில் பிச்சரம் செய்பவரா அல்லது அவ்வாறான ஓர் தரப்பினரது ஆதரவாளரா? இவற்றிற்கு எப்போது பதில் கிடைக்கும்?

அனைத்து விடயங்களையும் மூடி மறைப்பதற்கென்று பலமிக்க குழுக்களாக செய்யப்படுகின்றனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அரசாங்கத்திலும் நீதி கிடைக்குமா என்பது சந்தேகதிற்குரிய விடயமாகவே இருக்கிறது.

ஸஹ்ரான் எனும் நபருக்கும் கோட்டாவின் தேர்தல் செயற்பாடுகளுக்கும் உள்ள தொடர்பு என்ன? இந்த விதத்தில், சிங்கள பௌத்தர்கள், சிங்கள கிறிஸ்தவர்கள், தமிழ் கிறிஸ்தவர்கள், சில பௌத்த மத தலைவர்கள் , கிறிஸ்தவ மத தலைவர்கள் என அனைவரும் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

இவர்களின் தேர்தல் மேடைகளில், தேசத்தின் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் பற்றி பேசினார்கள், வைத்திய ஷாபி மற்றும் கருத்தடை செயற்பாடுகள் பற்றி பேசினார்கள் இவையெல்லாம் எதற்காக? இவ்வாறான விடயங்களை கூறி அனைத்து மக்கள் மத்தியிலும் பாதுகாப்பற்ற மன நிலையை உருவாக்கினார்கள், இந்த நிலையை அவர்களே உருவாக்கி அதிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கும் தாம் இருப்பதாக நம்பவைத்து மக்களை ஏமாற்றி ஆட்சியை கைப்பற்றிக்கொண்டார்கள்.

இந்த கூட்டு நாடகம் தொடர்பில் நிச்சயமாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், எனினும் எமது நாட்டில் நீதி நிலைநாட்டப்படுமா என்பது சந்தேகத்திற்குரிய விடயம் தான் என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply