ஊழல் மற்றும் இலஞ்ச தடுப்பு சட்ட பிரேரணையை இன்று சட்டதுறை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததுள்ளார். இன்று காலை பாராளுமன்றம் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் கேள்வி பதிலுக்கான நேரம் ஒதுக்கப்பட்டு அதன் பின்னர் இந்த சட்ட பிரேரணை முன் வைக்கப்பட்டது. இன்றைய நாள் முழுவதும் இந்த பிரேரணை மீது விவாதம் நடைபெற்றது. நாளையும் விவாதம் நடைபெறவுள்ளது.
இலஞ்ச ஊழல் விசாரணைய ஆணைக்குழுவுக்கு அதிகாரத்தை அதிகரிக்கும் வகையில் இந்த சட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டு அமைப்புளோடு இணைந்து இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பிலான விடயங்களை விசாரணை செய்யும் அதிகாரம் இந்த சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட அரச அதிகாரிகள் மற்றும் அரசியலமைப்பு பேரவை உறுப்பினர்கள் கூட தமது சொத்துக்கள், மற்றும் அவர்களின் மனைவி மற்றும் பிள்ளைகளது பெயர்களிலுள்ள பொறுப்புகள் பிரகடனப்படுத்துவதற்கும் பொறுப்புக் கூறுவதற்கும் உட்படுத்த முடியுமென்பதும் இந்த சட்டத்துக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
அரசியலமைப்பு சபையின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவை ஜனாதிபதி நியமிப்பார். அவ்வாறு நியமிக்கும் ஆணைக்குழு, இலங்கையுடன் வெளிநாடுகள் செய்யும் ஒப்பந்தங்கள் தொடர்பில் ஆராய, விசாரணை செய்ய முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளும் ஒப்பந்தங்கள், வெளிநாட்டு அமைப்புகளது பிரதிநிதிகள், வெளிநாட்டு அரசுகளினால் ஒப்பந்தங்களுக்கு நியமிக்கப்படும் பிரதிநிதிகள் போன்றவர்களை அந்த நாட்டு சட்ட அமைப்புகளோடு இணைந்து ஆராய அல்லது விசாரணை செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளது இலஞ்ச மற்றும் ஊழல் தடுப்பு சட்ட திட்டங்களுக்கு ஒத்ததாகவும், சர்வதேச அளவில் பரிந்துரை செய்யப்பட்ட சட்டம் மற்றும் நியமங்கள் உள்ளடங்கியதாக இந்த சட்ட மாற்றம் அமைந்துள்ளது.
புதிய சட்ட திருத்தத்தின் மூலம் இந்த குற்றத்துடன் சம்மந்தமுடையவர்கள் மற்றும் சந்தேக நபர்களை கைது செய்து விசாரிக்கும் அதிகாரம் இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ளது.