சூடானிலிருந்து மற்றுமொரு இலங்கையர்கள் குழு வெளியேறியது!

சவுதி அரேபியாவின் உதவியுடன் சூடானில் இருந்து மற்றுமொரு இலங்கையர்கள் குழு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சூடானில் இருந்து வெளியேற்றப்பட்ட 212 பேரில் இந்தக் குழுவும் அடங்குவதாக இலங்கைக்கான சவூதி அரேபியாவின் தூதுவர் காலிட் ஹமூத் அல்-கஹ்தானி தெரிவித்துள்ளார்.

சூடானிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் நேற்று (01.05) மாலை சவூதி அரேபியாவின் ஜித்தாவிற்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபிய அரச தலைமையின் வழிகாட்டுதலின் கீழ் இந்த வெளியேற்றங்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நேற்றைய தினம் (01.05) வெளியேறிய குழுவில் 41 சவுதி குடிமக்கள் மற்றும் இலங்கை, ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், கொமொரோஸ், உக்ரைன், மடகாஸ்கர், இங்கிலாந்து, சிரியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த 171 பேர் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதி அரசின் உதவியின் கீழ் இதுவரையில் 102 நாடுகளைச் சேர்ந்த 5184 பேர் சூடானை விட்டு வெளியேறியுள்ளதுடன், அவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் தயாராக இருப்பதாக சவூதி அரசு தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 15 அன்று சூடானில் இராணுவத்திற்கும் துணை ராணுவ விரைவு ஆதரவுப் படைகளுக்கும் (RSF) இடையே இடம்பெற்ற மோதலில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டதை அடுத்தே இந்த வெளியேற்றங்கள் இடம்பெறுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Social Share

Leave a Reply