வவுனியாவில் குளத்து நீரேந்து பிரதேசத்தை கையகப்படுத்தி வேலி அமைப்பு!

வவுனியா, கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழான குளத்து நீரேந்து பிரதேசத்தை கையகப்படுத்தி வேலி அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் (30.04) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் கீழான பட்டாணிச்சூர் புளியங்குளத்தின் குருமன்காட்டுக்கு அண்மித்த மன்னார் வீதி ஓரமாகவுள்ள நீரேந்து பிரதேசத்தை ஆக்கிரமித்து குறித்த சில நபர்களால் கம்பி கட்டை போடப்பட்டு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. குறித்த நீரேந்து பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றினை அண்மித்தே குறித்த வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே, குறித்த பகுதிக்கு அண்மையாக ஒரு பெண் தனது வீட்டினை அண்மித்த காணித் துண்டம் ஒன்றினை வேலியிட்டு அடைத்தபோது கமநல அபிவிருத்தி திணைக்களத்தினர் ஜேசீபி இயந்திரத்துடன் சென்று குறித்த வேலிகளை அகற்றியதுடன், அப்பெண்ணுக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தனர்.

ஆனால், இரவோடு இரவாக குறித்த பகுதியில் கம்பி வேலி அமைக்கப்பட்டு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள போதும் உரிய திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version