ரஷ்ய அதிபர் புடின் மீதான கொலை முயற்சி முறியடிக்கப்பட்டதாக கிரெம்ளின் அறிவித்துள்ளது. ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி இந்த படுகொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரெம்ளின் அருகே வந்த இரண்டு ஆளில்லா தாக்குதல் விமானங்களை ரஷ்யா சுட்டு வீழ்த்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விமானங்கள் மின்னணு ரேடார் அமைப்பைப் பயன்படுத்தி சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆளில்லா தாக்குதல் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதில், விமானங்களின் பாகங்கள் கிரெம்ளினைச் சுற்றியுள்ள பகுதிகளில் விழுந்துள்ளதாகவும், எனினும் இதன் காரணமாக, எதுவித சேதங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலும், சம்பவத்தின் போது ரஷ்ய அதிபர் புடின் கிரெம்ளினில் இருக்கவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதல் தொடர்பில் உக்ரைன் மீது ரஷ்யா நேரடியாக குற்றம் சுமத்தியுள்ளது. எனினும் இது குறித்து உக்ரைன் இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
மேலும், இந்த தாக்குதலுக்கு சரியான நேரத்தில் பதிலடி கொடுக்க ரஷ்யாவுக்கு உரிமை உள்ளது என ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், இந்த தாக்குத்தலை கொண்டு ரஷ்ய ஜனாதிபதியின் எதிர்கால திட்டத்தை மாற்றப்போவதில்லை என கிரெம்ளின் மேலும் தெரிவித்துள்ளது.