ஜனாதிபதியுடன் தான் வேலை செய்வதனை தடுக்க முடியாது எனவும், தான் தனது மக்களுக்கு எது தேவையோ அதனையே செய்வேன் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச ஆகியோரை சந்தித்த பின்னர் நேற்று(03.05) இந்த கருத்தை அவர் தெரிவித்துள்ளார். இருவரிடம் மக்கள் எதனை எதிர்ப்பார்க்கிறார்கள் என தெளிவுபடுத்தியுள்ளேன் என கூறியுள்ள வடிவேல் சுரேஷ், ஜனாதிபதியுடன் வேலை செய்வதிலும் தனக்கு பிரச்சினைகள் எதுவுமில்லை என கூறியுள்ளார்.
மே தினத்தில் மலையக மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடபிள் ஆற்றிய உரையில் கூறிய விடயங்களை ஜனாதிபதியிடம் கூறியுள்ளேன். தோட்ட தொழிலார்களின் சம்பளம், 9000 ஏக்கர் நிலங்கள் கைவிடப்பட்டுள்ள நிலையில் சிறுத்தைகளின் அதிகரிப்பு, அவற்றின் பாதிப்பு, காட்டு விலங்குகளினால் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், தோட்ட தொழிலார்களது சமூர்த்தி இழப்பு ஆகிய விடயங்கள் தொடரில் ஜனாதிபதிக்கு கூறியுள்ளதாகவும், உரியவர்களையும், தோட்ட கம்பெனிகள், தொழிற்சங்கங்கள், ஆகியவர்களை அழைத்து பேசுவதாக ஜனாதிபதி ரணில் உறுதியளித்துள்ளார் எனவும் வடிவேல் சுரேஷ் MP மேலும் கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பதுளை கூட்டம் ஒன்றுக்காக வருவதாக கூறிவிட்டு வராமல் போனமையினால் வடிவேல் சுரேஷ் அதிருப்தியடைந்து தான் ஐக்கிய மக்கள் சக்தியின் சகல பதவிகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார். நேற்று சஜித் பிரேமதாசாவை சந்தித்ததாகவும், விரைவில் பதுளைக்கு விஜயம் செய்வதாகவும் தனக்கு உறுதியளித்ததாகவும் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.