நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக, நாட்டின் பிரதான ஆறுகளின் நீர் நிலை மற்றும் வெள்ள நிலைமைகள் தொடர்பில் விசேட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதான ஆறுகள் எதுவும் வெள்ள நிலையை அடையவில்லை என நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் நீர்ப்பாசனப் பணிப்பாளர் எஸ்.பி.சி.சுகீஸ்வர தெரிவித்துள்ளார்.
எனினும் தென்மேற்கு மற்றும் மேற்கு வழியாக பாயும் ஆறுகளின் நீர்மட்டம் இயல்பை விட உயர்ந்துள்ளதாகவும், அத்தனகலு, களு, களனி, கிங், நில்வலா மற்றும் பெந்தர ஆகிய ஆறுகளின் நீர் மட்டம் தாழ்வான பகுதிகளில் சற்று அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அடுத்த 24 மணித்தியாலங்களில் எந்தவொரு ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் தொடரும் மழையினால் நீர் மட்டம் அதிகரித்துள்ள ஆறுகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறும் நீர்ப்பாசன திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.
கனமழை தொடர்ந்தும் பெய்தால் சில ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயத்தை தடுக்க முடியாது எனவும், எனவே பிரதான ஆற்றின் கிளை ஆறுகளின் இரு கரையோர பகுதிகளில் இருக்கும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.