சட்டவிரோதமாக நாட்டிற்குள் பிரவேசித்த 41 இலங்கையர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் இன்று (08.05) நாடு கடத்தியுள்ளதாக இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.
கடல் வழியாக சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த இலங்கையர்கள் குழுவை அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படையினர் கைது செய்து, கிறிஸ்மன் தீவில் தங்கவைத்து அங்கிருந்து விசேட விமானம் மூலம் இன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
அவுஸ்திரேலிய விமானமான ASY – 013 ஊடாக குழுவினர் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இவர்களில் யாழ்ப்பாணம் மற்றும் வாழைச்சேனை பகுதியை சேர்ந்த அநேகமானோர் இருப்பதாகவும், இவர்கள் மீன்பிடி இழுவை படகின் மூலம் அவுஸ்திரேலியாவிற்கு பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் மூன்று அதிகாரிகள், அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையினருடன் நாடு கடத்தப்பட்ட குழுவை சந்திக்க விமான நிலையத்திற்கு வந்திருந்ததுடன், அவர்களால், இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளிடம் இலங்கைக்கு அழைத்துவரப்பட்ட இந்தக் குழுவினர் ஒப்படைக்கப்பட்டனர்.
மேலும், அரச புலனாய்வுப் பிரிவினர் அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் விமான நிலையத்தின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (சிஐடி) அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், குறித்த குழுவினர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.