வெலிக்கடை பொலிஸில் வாக்குமூலம் பெற்றுக் கொண்டிருந்த பெண் ஒருவர் சுகவீனமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸ் திணைக்களம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரபல தொலைக்காட்சி நாடக தயாரிப்பாளரின் வீட்டில் தங்கப் பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கடந்த 11ம் திகதி வெலிக்கடை பொலிஸார் அந்த வீட்டின் பணிப்பெண்ணாக பணியாற்றிய பெண்ணை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்படும்போது குறித்த பெண் வேறு வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார் என தெரியவந்துள்ளது.
பதுளை தெமோதர பிரதேசத்தை சேர்ந்த, 42 வயதுடைய ஆர். ராஜ்குமாரி எனும் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பொலிஸாரின் தாக்குதலால் தனது மனைவி உயிரிழந்துள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.