எதிர்க்கட்சியின் பிரதம கொறடா, பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்கள் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று(19.05) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள்.
01.இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க பதவி நீக்கம் செய்யப்படும் பிரேரணைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி வாக்களிக்கும்.
02.உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போடப்பட்டதற்கு மறைமுகமாக உதவியமைக்கே திருமதி சார்ள்ஸுக்கு வடக்கின் ஆளுநர் பதவி வழங்கப்பட்டது.
03.மொட்டுக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபை, மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் வரப்பிரசாதங்களுடன் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் பணியாற்றுவதற்கு பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்குவதற்கான பிரேரணையொன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பாவனையாளர்களுக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுக்க அவர் எப்போதும் முயற்சித்தமையே அவரை நீக்குவதற்கு பிரதான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நுகர்வோரின் உரிமையை பாதுகாக்கவே அவர் முன்நின்றார். மின்சார சபைக்கு எதிராக நீதிமன்றம் சென்றதாகவே குறித்த குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டுள்ளது. நாட்டின் சாதாரண மக்களை சுரண்டுவதில் இருந்து பாதுகாக்கும் பொறுட்டே அவர் நீதிமன்றத்தை நாடினார். வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது இல்லை. மோசடி, ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை, உடல் நலத்துடன் இருக்கிறார்.
ஆணைக்குழுவின் பிரிவு 14 இன் பிரகாரம், நுகர்வோரைப் பாதுகாப்பதே அவரது முதன்மைப் பொறுப்பாகும், அவர் எப்போதும் நுகர்வோருக்கு நியாயமான விலையில் மின்சார அலகுகளை வழங்கவே முயற்சித்தார். இலங்கை நுகர்வோர் அதிகார சபையின் அனுமதியின்றி 68% அதிகரித்ததாகவும், தற்போது 3% வீதம் நிவாரணம் வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் அவர் நேற்று தெரிவித்தார். ஆனால் மின் கட்டணத்தை 27 சதவீதத்தால் குறைக்கலாம் என அவர் கூறுகிறார்.
இந்த தலைவர் நீக்கப்படுவதென்பது சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதான செயலாகும். சுயாதீன ஆணைக்குழுச் சட்டம் 2019 நல்லாட்சி அரசாங்கத்தினால் பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்பட்ட போதும் 2020 இல் கொண்டுவரப்பட்ட இருபதாவது திருத்தத்தின் கீழ் சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரம் நீக்கப்பட்டது. ஆனால் தேசிய மற்றும் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக, 21 ஆவது திருத்தத்தின் கீழ் சுயாதீன ஆணைக்குழுக்கள் அரசியலமைப்பின் பிரகாரம் மீண்டும் சுதந்திரமாக செயல்படும் நிலையைப் பெற்றன.
ஆனால் திரைமறைவில் சுயாதீன ஆணைக்குழுக்கள் மீது செல்வாக்கு அதிகமாக இருப்பதை நாம் காணமுடிகிறது. நுகர்வோருக்காகப் போராடிய தலைவரை நீக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதால் இந்த விடயம் இதற்கு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளதை காணலாம்.
உண்மையில்,இந்த மொட்டு அரசாங்கத்தின் வரலாற்றைப் பார்த்தால், ஷிராணி பண்டாரநாயக்காவை பதவி நீக்கம் செய்வதற்கும் இவ்வாறான பிரேரணையே கொண்டுவரப்பட்டது. திவிநெகும சட்டத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானவை என்று கூறி நாடாளுமன்றத்தில் குற்றப் பிரேரணை கொண்டுவரப்பட்டு அதன் மூலம் நீக்கப்பட்டார். இது அதன் அடுத்த கட்டம். ஆனால் அரசியலமைப்பின் பிரகாரம் சுயாதீன ஆணைக்குழுக்கள் என்று கூறினாலும் திரைமறைவில் செல்வாக்குகள் பிரயோகிக்கப்படுகின்றன. எனவே சுயாதீன ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்படுபவர்களுக்கு முதுகெலும்பு இல்லை என்றால் இவற்றை பாதுகாக்க முடியாது.
தேர்தல் ஆணைக்குழுவில் இருந்த திருமதி சார்லஸ், தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு மறைமுகமாக ஆதரித்ததைப் பார்த்தோம். சிறிது காலம் ஒழிந்திருந்தார், கூட்டங்களுக்கு வருகை தரவில்லை. இப்போது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நீதிமன்றத்தை எடுத்துக் கொண்டாலும் இதே நிலை தான். தேர்தலை நடத்த நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினாலும், தேவையான நிதியை அரசாங்கம் வழங்கவில்லை.
ஏனென்றால்,தேர்தலை நடத்தினால் கதி என்னவாகும் என்று அரசாங்கத்திற்கு தெரியும். அரசியலமைப்புச் சட்டத்தின் பிரகாரம் சுயாதீன ஆணைக்குழுக்கல் நியமிக்கப்பட்டாலும் இன்று திரைக்குப் பின்னால் பலத்த செல்வாக்கு பிரயோகிக்கப்படுகின்றன.
இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை நீக்குவதற்கு எதிராக அன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தி வாக்களிக்கும். மக்களுக்காக அதிகம் பாடுபட்ட ஒருவர்.
மின்சார சபையில் நடக்கும் அனைத்து ஊழல், முறைகேடுகளுக்கும் பயன்படுத்திய தொகையை குறுகிய காலத்தில் பெறுவதே வரம்பற்ற மின் கட்டணம் அதிகரிப்பின் இரகசியமாகும். முறைகேடுகளால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டவே இவ்வாறு மின்கட்டனம் அதிகரிக்கப்படுகிறது. மக்களுக்காக குரல் கொடுத்தவரை நீக்குவது பாரிய பாவசெயலாகும்.
மொட்டுக்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபை,மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள் மீண்டும் வரப்பிரசாதங்களுடன் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களில் பணியாற்றுவதற்கு பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசாங்கம் நீண்டகாலத் திட்டத்தில் செயற்பட்டு வருகின்றது என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது. தேர்தலை ஒத்திவைத்துவிட்டு மக்கள் அபிப்பிராயத்தைக் கேட்காமல் ஜனநாயக விரோதமாக இந்தச் செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வருமான வரி 100% அதிகரித்துள்ளது. அரசாங்கத்திடம் போதுமான நிதி உள்ளது, ஆனால் அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்து உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்களை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவிற்கு நியமித்து அந்த சபையில் கொடுப்பனவு மற்றும் சலுகைகளுடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது,இதுவே பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றுநிரூபத்தின் நோக்கம்.
பாகிஸ்தானுக்கு என்ன நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே, தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட போது, நீதிமன்றத்தை நாடினர்.இலங்கையைப் போல நிதி இல்லை என்று அதே பதிலை கொடுத்தனர்,ஆனால் பணத்தை தோடாமல் நீதிமன்றத்திற்கு ஆஜராக வேண்டாம் என பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் கூறியது. பணத்தை தேடாமல் ஆஜராகினால் சிறைக்குச் செல்ல நேரிடும் என பாகிஸ்தான் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.



