கட்டையர்குளம் காடழிப்பு தொடர்பில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை!

வவுனியா, கட்டையர்குளம் பகுதியில் இடம்பெற்ற காடழிப்பு தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச அதிபர் பிரதேச செயலாளருக்கு கடிதம் ஊடாக கோரியுள்ளார்.

வவுனியா, கட்டையர்குளம் பகுதியில் வனஇலாகாவிற்கு சொந்தமான சுமார் 12 ஏக்கர் வரையிலான காடு கிராம அலுவர் ஒருவரின் ஆதரவுடன் அழிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பில் கட்டையர்குளம் கிராம அபிவிருத்தி சங்கம் தடுத்து நிறுத்தியதையடுத்து, அதில் முன்னின்று செயற்பாட்ட பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு எதிராக போலி முகநூலில் அவதூறை ஏற்படுத்தி பதிவுகள் இடப்பட்டிருந்தன.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட ஆசிரியர் கொழும்பு CID மற்றும் வவுனியா CYBER CRIME பொலிசாரிடம் செய்த முறைபாட்டையடுத்து குறித்த கிராம அலுவர் பொலிசாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன், குறித்த பதிவுகள் கிராம அலுவலரால் இடப்பட்டதாக பொலிசார் தெரிவித்திருந்ததுடன், அதனை தமது தொழில்நுட்ப பிரிவின் ஊடாக அழித்திருந்தனர்.

இதன் தொடர்ச்சியாக கட்டையர்குளம் கிராம அபிவிருத்தி சங்கம் காடழிப்பு தொடர்பில் வவுனியா மாவட்ட செயலாளர் பீ.ஏ.சரத்சந்திரவிடம் செய்து கொண்ட முறைப்பாடு தொடர்பில், உடன் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசனிடம் கோரியுள்ளார்.

இதேவேளை, அண்மைக்காலமாக பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சில கிராம அலுவலர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளுக்கு பிரதேச செயலகம் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version