கொஸ்கம ஹாயிலெவல் வீதியில் அளுத் அம்பலம் பகுதியில் முச்சக்கர வண்டியும் கொள்கலனை ஏற்றிச் சென்ற பாரவூர்தியும் நேற்று (21.05) நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக கொஸ்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டியில் பயணித்த மற்றுமொருவர் அவிசாவளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கொஸ்கமவில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும், அவிசாவளையில் இருந்து கொஸ்கம நோக்கி பயணித்த கொள்கலன் பாரவூர்தியுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் காரணமாக கொள்கலன் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த தொலைபேசி கம்பத்தில் மோதியதால் தொலைபேசி கம்பம் களனிவெளி புகையிரத பாதையில் விழுந்துள்ளது.
இதன் காரணமாக களனிவெளி புகையிரத பாதையின் புகையிரத போக்குவரத்து சிறிது நேரம் தடைப்பட்டுள்ளது.
விபத்துடன் தொடர்புடைய கொள்கலன் பாரவூர்தியின் சாரதி கொஸ்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.