மக்கள் இலகுவாக கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ளும் வகையில் 50 பிரதேச செயலக அலுவலகங்களில் அதற்கான வசதிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
அவரது அமைச்சில் இன்று (22.05) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இம்முறையின் ஊடாக விண்ணப்பதாரர் ஒருவர் தனது கடவுச்சீட்டை 3 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பில் பலர் பேசுவதாகவும் , அதற்கு சரியானதொரு தீர்வு காண தான் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பணி நியமனம் பெற்று 20,000 – 25,000 ரூபாய் வரை பணம் பெற்றுக்கொண்டு பலர் செயற்படுவதாகவும், அவ்வாறு சட்ட விரோதமாக செயற்பட்ட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இத்துடன் தொடர்புடைய அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான நடவடிக்கைகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் இ-பாஸ்போர்ட் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அதற்காக அமைச்சரவையினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆண்டிற்குள் இ-பாஸ்போர்ட் வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் டிரான் தெரிவித்துள்ளார்.