இளைஞரை பொலிஸ் எனக் கூறி பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பிய வவுனியா பிரதேச செயலகம்!

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் கோரிய தன்னை பொலிசார் எனக் கூறி பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், வவுனியா பிரதேச செயலகத்தின் செயற்பாட்டால் பொலிஸ் புலனாய்வாளர் என மக்கள் தன்னை எண்ணுவதாகவும் சமூக செயற்பாட்டாளரான சூரியகுமார் கிருபன் தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடக அமையத்தில் நேற்று  (21.05) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா, ஓமந்தை, அரச வீட்டுத் திட்டப் பகுதியில் 219 பேருக்கான காணி திட்டங்கள் வழங்கவுள்ளதாக வவுனியா பிரதேச செயலகத்தால் அறிவித்து இருந்தார்கள். இது தொடர்பான முறைப்பாடுகள் இருந்தால் தெரியப்படுத்துமாறு கோரியிருந்தனர். அதன்போது நான் 219 பேரது விபரம் தொடர்பில் பிரதேச செயலாளருக்கு தெரியப்படுத்தும் போது இதில் ஊழல் நடைபெற்றுள்ளது. காணி உள்ள பலருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது என தெரியப்படுத்தியதுடன், இது தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாகவும் தகவல் கோரி விண்ணப்பித்து இருந்தேன்.

அதற்கு எனக்கு சரியான பதில் கிடைக்கவில்லை. இது சம்மந்தமாக பிரதேச செயலாளரிடம் நேரடியாக தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவ்வாறான விபரங்கள் இல்லை எனவும், நேர்முகத் தேர்வு குறித்து எந்த விபரங்களும் தரப்படவில்லை. இதனால் கடிதம் ஒன்று எழுதி அதனை பிரதேச செயலாளருக்கு அனுப்பி அதன் பிரதிகளை ஜனாதிபதி, பிரதமர், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, ஆளுனர், மாவட்ட செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பியிருந்தேன்.

இதன்பின் பிரதமர் செயலகத்தில் இருந்து ஒரு கடிதம் வந்தது. இது தொடர்பில் ஆராய்வதாகவும் இது தொடர்பான பதில் பிரதேச செயலகத்தால் தமக்கு வழங்கும் வேளை, தங்களுக்கும் அது அனுப்பி வைக்கப்படும் என தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

அதற்கான பதிலை பிரதேச செயலாளர் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளதுடன், அதன் பிரதியை எனக்கு அனுப்பியுள்ளார். அதில் நான் கேட்ட கேள்விகளுக்கு சம்மந்தமில்லாத பதில்களும்இ என்னையும், எனது குடும்பத்தாரைப் பற்றியும் அவதூறுகளையும் எழுதியிருந்தார். அதில் நான் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் என குறிப்பிட்டுள்ளனர். அந்தக் கடிதம் பிரதமருக்கு அனுப்பபட்டுள்ளது.

அன்றிருந்து எனக்கு ஒரே பிரச்சனை. நான் தனியார் துறையில் வேலை செய்கிறேன். பிரதேச செயலகத்தால் நான் பொலிசார் என குறிப்பிட்டுள்ளமையால் நான் செல்லும் இடங்களில் என்னை பொலிஸ் புலனாய்வாளர் என சந்தேகிக்கின்றார்கள். நான் பொது மக்கள் மத்தியில் செல்ல முடியவில்லை. இதனால் எனக்கு மனஉளைச்சலும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவுக்கும் முறையிட்டுள்ளேன். இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோருவதுடன், ஓமந்தை அரச வீட்டுதிட்டத்தில் முறைகேடற்ற வகையில் காணியை வழங்க வேண்டும் எனவும் கோருகின்றேன் எனத் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version