பத்தரமுல்லை, கொஸ்வத்தையில் உள்ள வீடொன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 இலட்சம் ரூபா பெறுமதியான அழகுசாதனப் பொருட்களுடன் 25 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுகர்வோர் அதிகார சபையின் கொழும்பு மாவட்ட விசேட சுற்றிவளைப்புப் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
உற்பத்தி பெயர் அல்லது முகவரி இல்லாத பொருட்கள் இணையத்தில் விற்பனை செய்யப்படுவதாக கொழும்பு மாவட்ட விசேட அதிரடி சோதனை பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் இருந்து அல்லாமல், புறக்கோட்டையின் பல இடங்களில் இந்த வகையான அழகுசாதனப் பொருட்களை வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அழகு சாதன பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ஈயம், பாதரசம், காட்மியம் மற்றும் ஆர்சனிக் போன்ற கன உலோகங்கள் உள்ளதா என்பதை கண்டறிய இலங்கை தர நிர்ணய நிறுவனம் மற்றும் ஆய்வு கூடங்களுக்கு இவை அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணை அறிக்கைகள் கிடைத்த பின்னர் கைது செய்யப்பட்ட இளைஞன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
குறித்த இளைஞசரிடமிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்கள் அடங்கிய சிறிய போத்தல்கள் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அந்த இடத்திற்கு சீல் வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபையின் கொழும்பு மாவட்ட விசேட அதிரடி சோதனைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.