இனவாதப் பிரச்சினைகளைத் தூண்டும் அல்லது அதற்கு எதுவாக செயற்படும் தனிநபர்கள் அல்லது ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்தப்படும் என பாதுகாப்பு அமைச்சு எச்சரித்துள்ளது.
நாட்டில் மீண்டும் ஒரு இன, மத நெருக்கடி ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக, கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து நாடு மீண்டு வரும் இக்கட்டான இந்த தருணத்தில் இவ்வாறான பிரச்சினைகள் தலைதூக்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டில் மத முரண்பாடுகளை தூண்டும் அமைதியான சூழ்நிலையை சீர்குலைக்கும் நோக்கத்துடன் பல்வேறு நோக்கங்களைக் கொண்டவர்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஆரோக்கியமான சமுதாயத்திற்கு மத ஸ்திரத்தன்மையை பேண வேண்டியதன் முக்கியத்துவத்தை இராஜாங்க அமைச்சர் தென்னக்கோன் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு பாகுபாட்டினை ஏற்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக அரசியலமைப்பின் 9வது அத்தியாயம் மற்றும் தண்டனைச் சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.