மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர் அந்தனி லோரன்ஸ் கண்டி வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே இன்று (30.05) காலமானார்.
“மலையகம் சமகால அரசியல் அரசியல் தீர்வு” என்ற நூல் உட்பட பல நூல்களை எழுதியுள்ள அமரர் லோரன்ஸ் தனது ஆரம்பகால கல்வியை தலவாக்கலை ஹொலிரூட் தோட்ட பாடசாலையிலும் க.பொ.த சாதாரண தரத்தை தலவாக்கலை சென். பெற்றிக்ஸ் கல்லூரியிலும் உயர்தரத்தை ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியிலும் தனது பட்டப்படிப்பை கொழும்பு பல்கலைக்கழகத்திலும் கற்றார்.
கல்லூரி காலத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியோடு தொடர்பு கொண்டு இயங்கிய இவர் 70களில் பல அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் அரசியல் காரணங்களுக்காக சிறை சென்றார். வடக்கு, கிழக்கு தமிழ் மக்களும் மழையக தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் தனியான தேசிய இனம் என்ற கருத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் இவரது பங்களிப்பும் அதிகம் உண்டு.
மலையக மக்கள் முன்னணியில் இணைந்து செயல்படுவதோடு அதன் ஸ்தாபக உறுப்பினர்களின் ஒருவராக செயற்பட்டு பின்னர் உப தலைவராக நியமிக்கப்பட்டதோடு பின்பு மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமாகவும் மறைகின்ற பொழுது மலையக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவராகவும் செயல்பட்டவர்.
மேலும் இவர், இனப்பிரச்சினை மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக தாய்லாந்து, ஜெர்மன், மலேசியா போன்ற நாடுகளில் நடந்த கருத்தரங்குகளில் மலையக தமிழ் மக்கள் சார்பாக பங்கு பற்றியுள்ளதோடு அரசியல் தீர்வில் மலையக தமிழ் மக்கள் பிரச்சினையை வலியுறுத்தி பல ஆய்வு கட்டுரைகளை எழுதியுள்ளார்.
மலையகத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு உருவாக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணி என்ற அமைப்பின் உருவாக்கத்தில் தனது அயராத பங்களிப்பை வழங்கியதோடு அதன் முதலாவது செயலாளராகவும் பணியாற்றினார்.
மலையக மக்களின் நலன்களுக்காக அதிகமாக பாடுபட்ட இவரது சேவைகளும், செயற்பாடுகளும் மக்களால் என்றும் மறக்கப்படாது.
இவருடைய மறைவானது மலையகத்திற்கு மட்டுமல்லாது, சர்வதேச மட்டத்திலும் மலையக மக்கள் முன்னணிக்கும் பாரிய இழப்பை தந்திருக்கிறது.