‘வார இறுதியிலும் எரிபொருள் விநியோகம் தடையின்றி தொடரும்’ – அமைச்சர் காஞ்சன!

இந்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோகத்தை தொடருமாறு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய சேமிப்பு முனையத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மேலதிக நேரச் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் கடந்த 4 மாதங்களாக பொது விடுமுறை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எரிபொருள் விலை குறையும் என்ற நம்பிக்கையில் கடந்த சனிக்கிழமை முதல் சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருள் அளவின் குறைந்தபட்ச இருப்புக்களை பேணாததால் தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் ஒதுக்கீட்டின் அதிகரிப்புடன், எரிபொருள் பாவனையாளர்களின் தேவையும் உடனடியாக அதிகரித்துள்ளதாகவும், இதனால் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், எரிபொருள் தட்டுப்பாடு குறித்து மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

இதேவேளை, விநியோகஸ்தர்கள் குறைந்த பட்ச எரிபொருள் கையிருப்பில் 50 வீதத்தை எப்பொழுதும் பேண வேண்டுமென அமைச்சர் தெரிவித்துள்ளதுடன், அவ்வாறு செய்யாத எரிபொருள் நிரப்பு நிலையங்களின் அனுமதிப்பத்திரங்களை மீளாய்வு செய்து இடைநிறுத்துமாறு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசைகள் காணப்படுவதாகவும், இதன் காரணமாக இன்று (02.06) காலை முதல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version