சர்வதேச மாநாட்டில் பங்குபற்றுவதற்காக பிரித்தானியாவுக்குச் சென்ற பொலிஸ் விளையாட்டுப் பிரிவின் நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் நாடு திரும்பவில்லை என குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் நடைபெற்ற 65வது சர்வதேச பொலிஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆறு அதிகாரிகள் பிரித்தானியாவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் ஜூன் 4ஆம் திகதி பணிக்குத் திரும்ப வேண்டும். எவ்வாறாயினும், மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் கடமைக்கு சமூகமளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து குறித்த அதிகாரிகள் தமது சேவையை கைவிட்டதாகக் கருதப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளதுடன், குறித்த நான்கு அதிகாரிகளுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் வெளிநாடு சென்று நாடு திரும்பவில்லை என குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் தெரியவந்துள்ளது.