சர்வதேச பாடசாலைகளுக்கான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் பூர்த்தி செய்யப்பட வேண்டிய தகைமைகள் தொடர்பில் புதிய முறைமையொன்றை தயாரிப்பதற்கு கல்விக்கான துறைசார் மேற்பார்வைக் குழு தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச பாடசாலைகளை ஒழுங்குபடுத்துவதற்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பிலும் கல்வி அமைச்சிடம் இருந்து அறிக்கை ஒன்றையும் இந்தக் குழு கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், ஆசிரியர் ஆட்சேர்ப்பில் தற்போது தகைமைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதில்லை எனவும் அந்த நிலைமையை சரி செய்ய வேண்டும் எனவும் குழுவின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் வி.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தப் பாடசாலைகளைக் கையாள்வதற்கும், அவற்றைக் கண்காணித்து ஒழுங்குபடுத்துவதற்கும் கல்வி அமைச்சில் விசேட பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட வேண்டுமென அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற குழுவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், தனியார் பயிற்சி வகுப்புகளை நடத்தும் ஆசிரியர்களுக்கு உரிமம் வழங்குவதற்கான முறைமையை தயாரிப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிக்கை சமர்பிக்குமாறு அந்த குழு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்த ஆசிரியர்களை முறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் இக்குழு வலியுறுத்தியுள்ளது.