ஊழல் எதிர்ப்பு சட்டத்திற்கு ஆதரவளிக்கப்போவதில்லை – திஸ்ஸ அத்தநாயக்க!

ஊழல் எதிர்ப்பு சட்ட மூலத்தில் திருத்தங்களை மேற்கொள்ளாவிட்டால், குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளிக்கப்போவதில்லை என பிரதான எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஊழர் எதிர்பு சட்டமூலம் இந்தவாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அக்கட்சியின், தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், ‘ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் மக்கள் எதிர்பார்த்த பல விடயங்களை அரசாங்கம் நீக்கியுள்ளது.

எனவே தற்போது காணப்படும் சட்டமூலத்தை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாட வேண்டியுள்ளது.

எமது நாட்டிலிருந்து கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பணம், சொத்துக்கள் என்பவற்றை மீளப் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடு இந்த சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட வேண்டும். அதே போன்று இதனுடன் தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட வேண்டும்.

இது தொடர்பான எந்தவொரு ஏற்பாடுகளும் இந்த சட்ட மூலத்தில் இல்லை. எனவே தற்போதுள்ள குறைபாடுகளை நீக்கி அதனை சமர்ப்பிக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்துகின்றோம். அவ்வாறில்லை எனில் இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்காது’ எனத் தெரிவித்தார்.

Social Share

Leave a Reply