விசா காலத்தை மீறி இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை திருத்தியமைத்து பொது பாதுகாப்பு அமைச்சினால் புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி,விசாகாலம் நிறைவடைந்து 07 முதல் 14 நாட்கள் வரை தங்கியிருந்தால் விதிக்கப்படும் அபராதம் 250 அமெரிக்க டாலராகவும், 14 நாட்களுக்கு மேல் தங்கியிருந்தால் விதிக்கப்படும் அபராதம் 500 அமெரிக்க டாலராகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
குடிவரவு மற்றும் புலம்பெயர்ந்தோர் சட்டத்தின் பிரிவு 23, (அத்தியாயம் 351) இன் கீழ் பொது பாதுகாப்பு அமைச்சரால் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவித்தல் பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அசல் விசாவின் செல்லுபடியாகும் காலம் முடிவடையும் திகதியிலிருந்து கணக்கிடப்பட்ட 07 நாட்களுக்குள் இலங்கையிலிருந்து புறப்படும் ஒருவர், புறப்படும் துறைமுகத்தில் பொருந்தக்கூடிய வீசா கட்டணத்தை செலுத்தி இலங்கையிலிருந்து புறப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையை மேம்படுத்துதல், முதலீட்டாளர்களை ஈர்த்தல் மற்றும் இலங்கையில் இயங்கிவரும் வெளிநாட்டுத் தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு மேற்படி அபராதம் செலுத்த வேண்டியிருப்பதனால் ஏற்படும் அசௌகரியங்கள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக மேற்படி திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.