பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் புதிய தலைவர் பொறுப்பேற்றார்.

பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ இன்று(23.06) பதவியேற்றுக் கொண்டார். அரசியலமைப்பு சபையின் அனுமதியின் பின்னர் அவர் பதவியேற்றுக் கொண்டுள்ளார்.

ஏற்கனவே தலைவராக கடமையாற்றிய ஜனக ரத்நாயக்க தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டிருந்தார். குறிப்பாக மின் கட்டணம் தொடர்பில் கடுமையான எதிர்ப்பினை வெளிக்காட்டியிருந்தார். அத்தோடு வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகரவுக்கும், இவருக்குமிடையில் கடுமையான கருத்து மோதல்கள் இடம்பெற்றும் இருந்தன. பாராளுமன்றத்தில் ஜனக ரத்நாயக்கவின் பதவி நீக்க பிரேரணை முன்வைக்கப்பட்டு 43 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டு கடந்த மே மாதம் 24 ஆம் திகதி அவர் பதவி நீக்கம் செய்யபப்ட்டிருந்தார்.

புதிய தலைவராக பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஏனைய அங்கத்தவர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்வியினை பயின்றுள்ளதுடன் வெளிநாடுகளிலும் பட்டப்படிப்புகளை மேற்கொண்டுள்ளார். 2016 ஆம் ஆண்டு முதல் பேராதனை பல்கலைக்கழத்தின் மின்சார மற்றும் இலத்திரனியல் பீடத்தில் சிரேஸ்ட விரிவுரையாளராக கடமையாற்றி வருகின்றார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version