பலங்கொட – சமனலவெவ பகுதியிலுள்ள வனப் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமனலவெவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போதே குறித்த 17 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் 26 முதல் 54 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், பலாங்கொடை, ஓப்பநாயக்க, வெலிகேபுர, சமனலபுர, மற்றும் கல்தொட்டபுர பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் புதையல் தோண்டுவதற்கு அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
சந்தேக நபர்கள் நேற்று (27.06) இரவு சமனலவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்து தற்காலிக கூடாரங்கள் மற்றும் மலசல கூடங்களை அமைத்து புதையல் தோண்ட முயற்சித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சமனலவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.