வவுனியா, கணேசபுரத்தில் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து கதிரையில் அமர்ந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விசேட தேவைக்குட்பட்ட நபரை தள்ளிவிட்டு கதிரையை பொலிஸ் பொறுப்பதிகாரி பற்றைக்குள் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமூக நலன்புரி திட்டத்திற்கு எதிராக நாடாளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், நேற்று (28.06) வவுனியா பெரியகட்டு கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கணேசபுரம் கிராமத்தினை சேர்ந்த மக்கள் வவுனியா – மன்னார் பிரதான வீதியினை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் அவ்வீதியூடான போக்குவரத்து ஒரு மணி நேரமாக முற்றாக ஸ்தம்பிதம் அடைந்திருந்தது.
இந்நிலையில் போராட்ட இடத்திற்கு வருகை தந்த பறயனாலங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்.
எனினும் மக்கள் கிராம சேவையாளர் அவ்விடத்திற்கு சமூகளிக்கும் வரை தாம் செல்ல மாட்டோம் என தெரிவித்த நிலையில் பறயனாலங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்களை பலவந்தமாக தள்ளி வெளியேற்ற முயற்பட்டார்.

இதன்போது கதிரையில் அமந்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விசேட தேவைக்குட்பட்ட முதியவர் ஒருவரை எழுப்பி அவரை தள்ளியதுடன், அவர் அமந்திருந்த கதிரையினை தூக்கி பற்றைக்குள் வீசினார்.
பொலிஸ் நிலைய பொருப்பதிகாரியின் செயலால் ஆத்திரமடைந்த மக்கள் மீண்டும் வீதியில் இறங்கி தமது போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
அதன் பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த பெரியகட்டு கிராம சேவையாளர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடி மேல்முறையீடுகளை மேற்கொள்ளுமாறும் தன்னால் இயன்ற உதவிகளை தாம் செய்வதாகவும் தெரிவித்தமையினையடுத்து போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
எனினும் விசேட தேவைக்குட்பட்டவரிடம் பொலிஸ் பொறுப்பதிகாரி மன்னிப்பு கோர வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து அவர் மன்னிப்பு கோரினார். இருப்பினும் குறித்த முதியவர் தலமைக்காரியாலயத்தில் முறைப்பாடு செய்வதாக தெரிவித்திருந்தார்.
தனக்கு தீர்வு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட விசேட தேவைக்குட்பட்ட நபர் மீது பொலிஸ் பொறுப்பதிகாரி முன்னெடுத்த மனிதாபிமானமற்ற செயற்பாடு போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியிருந்தது.