தேசிய கடன் மறுசீரமைப்பால் எவருக்கும் பாரிய பாதிப்பு ஏற்படாது எனவும், கடன் மறுசீரமைப்பை தொடர்ந்து பொருளாதார ரீதியில் பாரிய வெற்றிப்பெறுவோம் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவிதுள்ளார்.
பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்வு இன்று (01.07) நடைபெறுகிறது. இதன்போது தேசிய கடன் மறுசீரமைப்பு செயற்திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. குறித்த விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் எதிர் கட்சிகளின் எதிர்பார்ப்பு நிறைவேறாத காரணத்தால் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் எனக் கூறிய அவர், மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கு இறங்குவார்கள் என எதிர்பார்த்தார்கள் என்றும் கூறினார்.
மொத்த வெளிநாட்டு கடன்களில் 17 பில்லியன் டொலரை எதிர்வரும் ஐந்தாண்டு காலங்களுக்கு குறைத்துக் கொள்ளுமாறு பிரதான நிலை சர்வதேச கடன் வழங்குநர்களிடம் வலியுறுத்தியுள்ளோம். ஆகவே, சர்வதேச கடன்களை மறுசீரமைத்தால் மாத்திரம் பொருளாதார பாதிப்புக்கு நிலையான தீர்வு காண முடியாது என்ற காரணத்தால் தேசியகடன்களை மறுசீரமைக்க கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் தேசிய கடன் மறுசீரமைக்கப்படுவதால் வங்கி கட்டமைப்புக்கும்,வங்கிகளின் ஸ்திர நிலைக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என வலியுறுத்திய அமைச்சர், ஊழியர் சேமலாப நிதியத்துக்கும் பாதிப்பு ஏற்படாது. ஆகவே கடன் மறுசீரமைப்பை தொடர்ந்து பொருளாதார ரீதியில் பாரிய வெற்றிப்பெறுவோம் எனவும் கூறினார்.