சிம்பாவேயில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண தொடரின் சுப்பர் 6 சுற்றில் இலங்கை அணி சிம்பாவே அணியை வெற்றி பெற்று உலகக்கிண்ண தொடருக்கு தகுதி பெற்றுள்ளது. சுப்பர் 6 தொடரில் முதலிரு இடங்களையும் பெறுமணிகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். அதன் படி அந்த இரு அணிகளும் உலகக்கிண்ணத்துக்கான வாய்ப்பை பெற்றுய்க் கொள்ளும். சுப்பர் 6 தொடரில் முதலிரு இடங்களை சேர்ந்த இலங்கை, சிம்பாவே அணிகள் மோதிய இன்றைய(02.07) போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறது. சிம்பாவே அணி அடுத்த போட்டியில் வெற்றி பெற்றால் அவர்களுக்கான வாய்ப்பு கிடைக்கும். தோல்வியடைந்தால் சிக்கல் நிலை உருவாகலாம். சிம்பாவே அணி அடுத்து ஸ்கொட்லாந்து அணியுடன் மோதவுள்ளது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பாடிய சிம்பாவே அணி 32.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து, 165 ஓட்டங்களை பெற்றது. இதில் சோன் வில்லியம்ஸ் 56 ஓட்டங்களையும், சிகண்டார் ரஷா 31 ஓட்டங்களையும் பெற்றனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் டில்ஷான் மதுசங்க ஆரம்ப 3 விக்கெட்களையும் கைப்பற்றினார். மஹீஸ் தீக்ஷண 4 விக்கெட்களையும், மதீஷ பத்திரன 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி பத்தும் நிஸ்ஸங்கவின் இரண்டாவது சதம் மூலம் இலகுவான வெற்றியினை பெற்றுக் கொண்டது. 33.1 ஓவர்களில் 1 விக்கெட்டினை இழந்து 169 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. பத்தும் நிஸ்ஸங்க ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களையும், டிமுத் கருணாரட்ன 30 ஓட்டங்களையும், குஷல் மென்டிஸ் ஆட்டமிழக்காமல் 25 ஓட்டங்களையும் பெற்றனர். ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் 103 ஓட்டங்கள். போட்டியின் நாயகனாக மஹீஸ் தீக்ஷண தெரிவான.
இலங்கை அணி அடுத்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் மோதவுள்ளது.