அவசர அவசரமாக கொண்டு வரப்படும் சட்டங்களால் பயனில்லை. சுதேச மற்றும் பாரம்பரிய மருத்துவத் துறைகள் இரண்டும் பாதுகாக்கப்பட வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேதாச வலியுறுத்தியுள்ளார்.
ஆயுர்வேதம் மற்றும் சுதேச மருத்துவம் தொடர்பாக நிலவும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இன்று(03.07) காலை கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் ஆயுர்வேத,சுதேச வைத்தியர்கள் பிரதிநிதிகள் குழுவினரைச் சந்தித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புதிய ஆயுர்வேத திருத்தச் சட்டத்தின் ஊடாக இந்நாட்டின் பாரம்பரிய மருத்துவத் துறையை முற்றாக அழிக்க தற்போதைய அரசாங்கம் தயாராகி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆயுர்வேத மருத்துவத் துறைக்கு சட்டக் கட்டமைப்பொன்று தேவை என்பதை தாமும் ஏற்றுக்கொள்வதாகவும்,ஆயுர்வேத மருத்துவம் மற்றும் பாரம்பரிய மருத்துவ துணைத் துறைகள் இரண்டிற்கும் பொருந்தக்கூடிய வகையில் சட்ட கட்டமைப்பைத் தயாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அவசர அவசரமாக இவ்வாறான சட்டமூலங்களை கொண்டு வருவதற்கு பதிலாக சுகாதார அமைச்சர், சுதேச மருத்துவத்துறை அமைச்சர் உள்ளிட்ட தரப்பினர் இது தொடர்பில் முறையான கலந்துரையாடலை நடத்தி நிலைமையை சரியாக புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர், தற்போது முன்வைக்கப்படவுள்ள சட்டமூலத்தை குறித்த தரப்புகள் உடனடியாக ஆராய்ந்து தெளிவான நிலைப்பாட்டை எட்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.