காங்கேசன்துறையிலிருந்து மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடற்தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் கரையோர மக்களும் பாதுகாப்பாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நிலவும் மழையுடனான காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்ய கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடமத்திய மாகாணத்திலும் புத்தளம், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.