சப்ரகமுவ மாகாண ஆளுநருடன் ஆனந்தகுமார் கலந்துரையாடல்!

இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பது குறித்து சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்கவுடன் ஐக்கிய தேசிய கட்சியின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் சுப்பையா ஆனந்தகுமார் இன்று(04.07) கலந்துரையாடியுள்ளார்.

 சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திஸாநாயக்க நியமிக்கப்பட்டமைக்கு ஆளுநர் அலுவலகத்துக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த சுப்பையா ஆனந்தகுமார் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளதாக ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

இந்த மாவட்டங்களில் பாடசாலைகளில் காணப்படும்; பல்வேறு குறைபாடுகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் பாடசாலைகள் எதிர்கொண்டுள்ள சிக்கல்கள் மற்றும் தமிழ் பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை குறித்தும் கலந்துரையாடல் நடத்தியுள்ளார்.

அதேபோன்று பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு தோட்டங்களில் பயன்படுத்தப்படாதுள்ள நிலங்கள், தரிசு நிலங்களை விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பெற்றுக்கொடுப்பது குறித்தும்  கலந்துரையாடியுள்ளார்.

அத்துடன் அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் சமூகநலத்திட்டங்கள் மற்றும் நிவாரணத் திட்டங்களில் இந்த மாவட்டங்களின் மக்களையும் இணைத்துக்கொள்வதுடன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பெருந்தோட்ட மக்களுக்கு முன்னுரிமையளிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

அதேபோன்று வாழ்வாதாரத்தை இழந்தது தவிக்கும் பெருந்தோட்ட மக்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தல், உழைப்பதற்கான வழிமுறைகளை ஏற்படுத்திக்கொடுப்பது குறித்தும் பெருந்தோட்டங்களில் காணப்படும் சுகாதார குறைப்பாடுகளுக்கு உரிய தீர்வை வழங்குவதன் அவசியத்தையும் ஆளுநரிடம் எடுத்துரைத்ததாக ஆனந்தகுமார் மேலும் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version