இலங்கை ரக்பி தடை செய்யப்பட்டமைக்கு இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவின் தேவையற்ற செயற்பாடே காரணமென விளையாட்டுதுறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
‘இலங்கை ரக்பியின் முகாமைத்துவத்துக்குள் அரசியல் தலையீடுகள் உள்ளன’ என தெரிவித்து இலங்கை ஒலிம்பிக் குழு, சர்வதேச ஒலிம்பிக் குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. அதன் விளைவாகவே இலங்கை ரக்பி தடை செய்யப்பட்டது என ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு உலக ரக்பி மற்றும் ஆசிய ரக்பி சம்மேளனங்கள், இலங்கை ரக்பியின் தடையை நீக்குவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளுக்காக வருகை தந்துள்ளன. குறித்த அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று(05.07) விளையாட்டு அமைச்சருடன் சந்தித்து கலந்துரையாடினர்கள். அதன் பின்னரே விளையாட்டு துறை அமைச்சரினால் குறித்த குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது.
“இவ்வாறு கடிதம் எழுதவோ, தொடர்பாடல்களை செய்யவோ ஒலிம்பிக் குழுவுக்கு காரணமோ, உரிமையோ இல்லை. அவ்வாறு ஏதாவது விடயங்கள் இருப்பின் அதனை முதலில் விளையாட்டு துறை அமைச்சருக்கு முதலில் கொண்டு வரவேண்டும். ஆனால் அதனை அவர்கள் வேண்டுமென்றே புறக்கணித்துள்ளனர். அதனாலேயே இன்று இலங்கை ரக்பி தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்கான முழு பொறுப்பையும் அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்” என அமைச்சர் கூறியுள்ளார்.
இலங்கை வருகை தந்துள்ள குழுவினர் பயிற்றுவிப்பாளர்கள், மற்றும் சில ரக்பி கழகங்களை சந்திக்கவுள்ளனர் என தெரிவித்த ரொஷான், சில கழகங்கள் எழுத்தளவிலான கழகங்களாக காணப்படுவதாகவும் அதனால் வருகை தந்துள்ள குழுவினர் பயிற்றுவிப்பாளர்களை சந்திக்கின்றனர் என கருத்து வெளியிட்டுள்ளார்.
நடைபெறவுள்ள ஆசிய கிண்ண ரக்பி போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்குபற்றும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர், தற்போது நடைபெற்று வரும் உண்மையறியும் இந்த திட்டத்தின் பின்னர் இலங்கை மீதான தடை நீக்கப்படுமென மேலும் கூறியுள்ளார்.