இந்தியா கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கார் இந்திய கிரிக்கட் அணியின் தெரிவுக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் நியமிக்கப்பட்ட தெரிவுக்குழுவில் ஷிவ் சுந்தர் தாஸ், சலில் அங்கோலா, சுப்ரோட்டா பானர்ஜி, தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீதரன் சரத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். இவர்களுள் சிரேஷ்ட வீரரான அஜித் அகர்கார் போட்டியின்றி தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
கடந்த பெப்ரவரி மாதம் முன்னாள் தெரிவுக்குழுவின் தலைவர் சேட்டன் ஷர்மா தெரிவுக் குழு தலைவர் பதவியிலிருந்து விலகியதனை தொடர்ந்து ஏற்பட்ட இடத்துக்கு அஜித் அகர்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கிந்திய தீவுகள் அணியுடன் நடைபெறவுள்ள தொடருக்கான அணியினை புதிய தெரிவுக்குழு தெரிவு செய்யவுள்ளது. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற நேர்முக தெரிவில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் கிரிக்கெட் ஆலோசனைக் குழு ஏகமனதாக அகர்காரை தெரிவு செய்துள்ளனர்.
அகர்கார் விளையாட ஆரம்பித்த காலத்தில் வேகமான முதல் 50 விக்கெட்களை கைப்பற்றியவர் என்ற சாதனையை கொண்டிருந்தார். 196 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகள், 26 டெஸ்ட் போட்டிகள், நான்கு 20-20 போட்டிகள் என்பனவற்றில் விளையாடியுள்ளார்.