இலங்கையின் வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்த புதுடில்லியில் இருந்து கடமையாற்றும் 09 வெளிநாட்டுத் தூதுவர்களுக்கென “எல்ல ஒடிஸி”விசேட நட்புறவு சுற்றுப்பயணமொன்று வெளிவிவகார அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் என்பவற்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கையின் சுதந்திரம் மற்றும் இராஜதந்திர உறவுகளின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த எல்ல ஒடிஸி சுற்றுலா ஒழுங்கு செய்யப்பட்டது. சர்வதேச சமூகத்துடனான இலங்கையின் நீடித்த உறவை இது மேலும் பிரதிபலிக்கிறது.
அழகிய மலைநாட்டைக் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயணம் ஜூலை 01 முதல் 03 ஆம் திகதி வரை மேற்கொள்ளப்பட்டது. காலனித்துவ காலத்தை நினைவுகூரும் விசேட ரயிலான வைஸ்ரொயிஸ் விசேட ரயிலில் ( Viceroy Special ) தூதுக்குழுவினர் பயணம் செய்தனர்.
இராஜதந்திரக் குழுவினர் கண்டியில் இருந்து நுவரெலியா வரை குளிர் மலைப்பகுதிக்கு பயணித்ததோடு, இலங்கையின் அழகையும் விருந்தோம்பலையும் அனுபவித்து, பல்வகைமை நிறைந்த நக்கிள்ஸ் மலைத்தொடர் மற்றும் இலங்கையின் உயரமான ரயில் நிலையமான பட்டிபொலவையும் பசுமையான மற்றும் மூடுபனியுடனான மலைகளிடையே மறைந்திருக்கும் புதுமைகளையும் கண்டுகளித்தவாறு சென்றனர். ஆரம்ப காலத்தில் பயன்படுத்தப்பட்ட ரயில் சமிக்ஞை செயல்முறை மற்றும் நமது நாட்டின் ரயில்சேவையில் இன்னும் பின்பற்றப்படும் சமிக்ஞை டெப்லெட் முறையைப் பார்க்கும் வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும், இந்த புகையிரத பாதையில் பயணிக்கும் போது காணக்கூடிய 20 ஆம் நூற்றாண்டின் அற்புதமான நிர்மாணமான எல்ல ஒன்பது வளைவுகள் பாலம் மற்றும் தெமோதர புகையிரத வளைவு ஆகியவற்றை வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கு பார்வையிடும் வாய்ப்பு கிடைத்தது.
காலனித்துவ வரலாற்றிலும் பெருமையிலும் ஊறிப்போன தேசிய மரபுரிமைச் சின்னமான நுவரெலிய கிராண்ட் ஹோட்டலுக்குச் சென்று வெளிநாட்டவர்களிடையே பிரபலமான இலங்கை விருந்தோம்பலை அனுபவிக்கவும், பேத்ரோ தேயிலை தோட்டத்தில் உலகப் புகழ்பெற்ற “சிலோன் டீ” தேநீரை சுவைக்கவும் அவர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.
நுவரெலியா ஜனாதிபதி இல்லத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க ஆகியோரைச் சந்திக்கும் வாய்ப்பும் தூதூவர்களுக்குக் கிடைத்தது. இந்த விசேட சுற்றுப் பயணத்திற்கு வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகம் என்பன அனுசரணை வழங்கியிருந்தன.
சர்வதேச சமூகத்துடனான 75 ஆண்டுகால ஆக்கப்பூர்வமான ஈடுபாட்டை நினைவுகூரும் வகையில் இந்த மலைநாட்டு சுற்றுப்பயணம் அமைந்ததோடு இலங்கையிலுள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களின் மதிப்பு மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் உதவுகிறது.
அத்துடன், நாடு மீண்டும் ஸ்திரத்தன்மையை அடைந்துள்ளதையும், இந்த நாட்டில் சிறந்த உறவுகளையும், இலங்கையர்களின் வெளிப்படைத் தன்மையையும் நட்புறவையும் உலகிற்கு வலியுறுத்த இதன் ஊடாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.